Saturday, May 5, 2012

விலையேற்றம்!! அருமையான திட்டங்களை போடும் அரசு!!



தனியார் மருத்துவமனைகள் சந்திக்கு சந்தி உருவாக்கி வருகின்றன!!! 25 வயதிலேயே இதயநோய், கொலஸ்ரோல், சக்கரைவியாதி முதற்கொண்டு வாயில் பெயர் நுழைய முடியாத பல வியாதிகளும் இன்று அதிகரித்து வருகின்றது!! மெடிக்கல் செக்கப், டயட் மாத்திரைகள், ஜிம், இலத்திரனியல் எடை குறைப்பு இயந்திரங்கள் என நாளுக்குநாள் செலவுகளும், வீண் விரயங்களும் அதிகரித்து வருகின்றன!! இந்த நிலையை இப்படியே விட்டால் எதிர்வரும் காலங்களில் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள திட்டம்தான் 'விலை அதிகரிப்பு'!!!

கோதுமை மா -: இன்றைய அதிக நோய்களின் முக்கிய காரண கர்த்தா கோதுமை மா!! இன்றைக்கு அதிகமானவர்களுக்கு குடைச்சலாக இருக்கும் கொலஸ்ரோல் வியாதிக்கு டாக்டர்கள் சொல்லும் முதல் அறிவுரையே கோதுமை மாவின் பாவனையை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்!! என்னதான் டாக்டர்கள் சொன்னாலும் எம்மவர்கள் கேட்ப்பதேயில்லை!! இதனை கருத்திற் கொண்டுதான் அரசு செய்த திடீர் மருத்துவ திட்டம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!! 1 kg கோதுமை மாவின் விலை இன்று 88 ரூபா!!! (போஸ்ட் பப்ளிஷ் ஆவதற்கும் விலை இன்னமும் அதிகரித்தால் நான் பொறுப்பல்ல!!)15 ஆண்டுகளிற்கு முன்னர் 15 ரூபா அளவில் விற்கப்பட்ட கோதுமை மா இன்று கிட்டத்தட்ட 6 மடங்கு உயர்வடைந்துள்ளது!! இவ்வாறு கோதுமை மா விலை அதிகரிப்பதால் உள்ளூர் உற்பத்திகளான மரவள்ளி, சோளம் போன்றவற்றை மக்களை உணவிற்கு பயன்படுத்தச் செய்வதும் இதன் மற்றொரு சிறப்பம்சம்!!

பால்மா -: 400 கிராமின் பால்மா 90 களின் நடுப்பகுதியில் 60 ரூபாய்க்கு வாங்கிய ஞாபகம்! இன்று அதன் விலை 60 'ஓவா'வால் அதிகரித்துள்ளது; 1 kg பால்மா 161 'ஓவா'வால் அதிகரித்துள்ளது!! 400 கிராமின் இன்றைய விலை அண்ணளவாக 325 ரூபாவாக உயர்ந்துள்ளது!!! இப்படி ஒரு விலை அதிகரிப்பை இதற்கு முன்னர் இலங்கை மக்கள் எதிர்கொண்டதில்லை!! இதற்கு காரணம் அதிக 'டீ' குடிப்பதால் ஏற்ப்படும் சக்கரைவியாதி மற்றும் கொலஸ்ரோல் போன்ற நோய்களை குறைப்பதுதான் என்றாலும் அதையும் தாண்டி கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரியமுறை இன்று இல்லாமல் போவதை தடுத்து அதனை மீண்டும் ஊக்கப்படுத்துதலும் முக்கியமானது!!!

பால்மா விலை ஏற்றத்தால் வீடுகளில் கறவை மாடுகளும், மறி ஆடுகளும் வளர்க்க ஆரம்பித்தால் பாலும் கிடைக்கும், கூடவே வீட்டில் மிச்சமாகும் கழிவு உணவுப் பொருட்களும் அவற்றுக்கு உணவாக்குவதால் சுற்றமும் சுகாதாரமும் பேணப்படும்!! இதனால்த்தான் பால்மாவின் விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அரசு!!! பால்மா விலை ஏற்றத்தால் பலர் 'பிளேட் டீ' மட்டும் குடிக்க ஆரம்பிப்பார்கள்; இதனால் தேசிய தேயிலை உற்பத்தியை மக்கள் அதிகளவில் நுகரவும் வாய்ப்புள்ளது!! கூடவே கோப்பியும்!!


சமையல் எரிவாயு :- அப்பப்போ தாறுமாறாக விலையேற்றம் எகிறும், இம்முறை விலை ஏறி இருப்பது ஒரு சிலிண்டருக்கு வெறும்.. வெறும்.. வெறும்... வெறும்.. 350 ரூபாயால்த்தான்!!!! ரொம்ப கம்மியாத்தான் ஏற்றி இருக்கிறாங்க! எரிவாயுவால் ஏற்ப்படும் புகையானது 'பீ'சோன் (ஒசொனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா) படத்தை தாக்கும் என்பதாலும், அதிகளவில் தேக்கமாகும் பொச்சுமட்டை, தென்னைமட்டை, பனைமட்டை, தென்னோலை, பனையோலை, ஊமல்கொட்டை போன்றவற்றை எரிப்பதால் சூழலில் அவை தேங்குவதால் உருவாகும் நுளம்பு பெருக்கத்தை இல்லாமல் செய்து டெங்கை ஒழிப்பதுதான் இதன் மறைமுக திட்டம்!! அதே நேரம் வீதிகளில் அதிகளவு சிலிண்டர்களை கொண்டுவரும் கண்டெய்னர்களை சிட்டி (வேஷன் 2.௦) போன்ற மோட்டு ரோபோக்கள் பிரட்டினால் உண்டாகும் சேதங்களும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது!! 2008 களில் 800 ரூபாயில் இருந்த சிலிண்டர் இப்போது 2500 க்கும் மேல்!!!


சீமெந்து :- 70 ரூபாவால் அதிகரித்துள்ளது!! வெற்றுக் காணிகளில் கட்டடங்களை கட்டுவதால் பல மரங்கள் தறிக்கப்பட்டு இயற்கையின் சமநிலை குழப்பப்படுகின்றது. மழை குறைவாக கிடைப்பதற்கும் இதுவே ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகின்றது!! சீமெந்தின் விலையை அதிகரிப்பதால் தேவையற்று கட்டப்படும் கட்டடங்களின் அளவை குறைக்கலாம் என திட்டமிட்டிருக்கின்றார்கள்; மணல் விற்கும் விலைக்கு சீமெந்தின் விலை ஏற்றம் அவ்வளவாக பாதிப்பில்லை என்றே சொல்லவேண்டும்! இருந்தாலும் இந்த விலை ஏற்றங்களால் உண்டாகும் மற்றொரு நன்மை மண்னினாலான வீடுகளை ஊக்குவிப்பது!! எமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மண்னினாலான வீடுகள் குளிர்மையானவையாக இருக்கும் என்பது குறிப்படதக்க விடயம்! அத்துடன் செங்கல்லின் பாவனையை அதிகப்படுத்தி செங்கல் உற்பத்தியை அதிகரிக்கவும் இவ்விலை ஏற்றம் ஆவன செய்திருக்கின்றது!!

எரிபொருள், வாகனம் - இவற்றின் விலைகள் அதிகளவில் ஏற்றப்பட்டமைக்கான காரணம் சூழல் மாசடைதல், மற்றும் வீதி விபத்துக்கள்தான்!! குறைவான விலைகளில் எரிபொருட்களும் வாகனங்களும் இருக்குமிடத்தில் அவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் மேற்சொன்ன காரணங்கள் பாதகமாக அமைந்து விடுகின்றன; எனவே இவற்றை குறைக்கவே இந்த விலை ஏற்றங்கள்!! அத்துடன் இதனால் துவிச்சகரவண்டி, மாட்டுவண்டில் பாவனைகளும் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உண்டு; இவை உடலுக்கு பயிற்சியாக அமைவதால் உடலின் கொழுப்பு கரைக்கப்படுகின்றது; இதனால் கொலஸ்ரோல் போன்ற கொழுப்பு வியாதிகள் குறைக்கப்படலாம்!! மற்றும் இன்சூரன்ஸ், டக்ஸ், லைசென்ஸ் வழங்கப்படும் இடங்களில் கூட்டமும் நெரிசலும் குறைக்கப்படலாம்; இதனால் அரசுக்கு பணத்தால் நஷ்டம் ஏற்ப்பட்டாலும், மக்களின் நலனே முக்கியம் என்பதால் அரசு நஷ்டத்தை பெரியமனதாக ஏற்றுக்கொள்கின்றது!!

நள்ளிரவு 12 மணிக்கு விலை ஏற்றப்படும் என்கின்ற அறிவிப்பை முதல்நாள் மாலைக்கு முன்னமே அரசு SMS மூலம் அறிவித்து விடுகின்றமை இன்னும் விசேடம்!! மாலை 3 மணிக்கு SMS வருகின்றதென்றால் எமது கடைகளில் குறிப்பிட்ட பொருட்கள் மாலை 3 மணியில் இருந்து மறுநாள் அதிகாலைவரை இருப்பதில்லை!!! எப்படித்தான் ஒட்டுமொத்த கடைகளிலும் தீர்ந்துபோய் விடுகின்றதோ!! (ஒரு சில கடைகள் விதி விலக்காகவும் உண்டு) முன்பெல்லாம் விலையில் ஏற்ற இறக்கம் வரும்போது வியாபாரிகளுக்கு லாப, நஷ்டம் வரும்; இப்போதெல்லாம் விலையேற்றம் மட்டுமே என்பதால் லாபம் மட்டும்தான், அதிலும் அப்பப்போ கொள்ளை லாபம்!!


அத்தியாவசிய பொருட்கள் விலைமட்டும் அப்பப்போ பெரியளவில் எகிறும்போது பியர், சிகரட், சோடா விலைகள் மட்டும் எப்படித்தான் மந்தகதியில் ஏறுகின்றனவோ!!! இவற்றின் விலையை கூட்டினால் மட்டும் குடிக்காமல் இருந்துவிடவா போகிறார்கள்!! அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 5 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளபோதும் தொழிலாளர்களின் சம்பளம் மட்டும் நகர கஷ்டப்படுகின்றது!! அரச தனியார் ஊழியர்களுக்கு ஓரளவிற்கு அப்பப்போ சம்பள உயர்வு கிடைத்தாலும் அதிகளவு கடைகள், தொழிற்சாலைகள், தோட்டங்களில் பணி புரிபவர்களுக்குத்தான் சம்பள அதிகரிப்பு வெறும் கனவாகவே இருந்து வருகின்றது!!

1990 களின் நடுப்பகுதியில் 9 ரூபாய் விற்ற பாணின் இன்றயவிலை 58 ரூபா!! பால்மாவின் விலை 60 இல் இருந்து 325 ரூபா!! மண்ணெண்ணெய் 11 ரூபாயில் இருந்து 100 +!!! அடிப்படை தேவைகளான இவையே இப்படியென்றால் தங்கம் 4000 இல் இருந்து இன்று பத்து மடங்கு தாண்டியாகிவிட்டது!! ஆனால் இவர்களின் சம்பளம் மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட 3000 ரூபாயில் இருந்து 7000 வரைக்கும் தான் உயர்ந்திருக்கின்றது!! 7000 ரூபா சம்பளம் வாங்கி ஒரு குடும்பத்தை நடத்துவது சாத்தியாமா? என்று எந்த முதலாளியும் சிந்திப்பதில்லை!! குடும்ப கஷ்டம், படிப்பறிவின்மை போன்ற காரணங்களால் முதலாளிகளுக்காக தெரிந்தோ, தெரியாமலோ அடிமாடாய் உழைக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்குக அரசு குறைந்த பட்சம் நியாயமான ஊதியம், வேலை நேரம் , விடுமுறை போன்றவற்றை நியாயமாக பெற்றுக்கொடுப்பது கட்டாய கடமை!

பல கடைகளில் காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை பெண்ட் எடுக்கப்படும் எத்தனையோ இளைஞர்/சிறுவர்களை காணலாம்; வாரம் ஒருநாள் விடுமுறையே கெஞ்சி வாங்கும் அளவிற்கு கொடூர முதலாளிகள் பலருண்டு!! குறிப்பிட்ட நேரம் தாண்டி வேலை செய்தால் மேலதிக சம்பளம், விடுமுறை தினங்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம், ஞாயிறுகளில் கட்டாய விடுமுறை என பல சட்டங்கள் வர்த்தக சங்கங்களில் உண்டு என்றாலும், முதலாளிகளின் பணத்திற்கு முன்னால் சட்டம் இருட்டறைதான்!! கடைகளிலும், தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வாழ்வை தொலைக்கும் இவர்களுக்கு அடிப்படை உரிமை மற்றும் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது இன்றியமையாதது!!


சில நாட்களில் வழமைபோல படித்தவன் விலை உயர்வுக்கு போராட்டம் செய்வான்; அரசும் ஒரு சிறுதொகையை ஊதிய உயர்வாய் அறிவிக்கும்; ஆனால் படிக்காத, ஏழ்மையை சமாளிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனுக்கும்/யுவதிக்கும் வழமைபோல அதே சம்பளம், அதே வேலை!!! தொழிற் சங்கங்கள், மனித உரிமை நிறுவனங்கள் அனைத்தும் A/C கட்டடம் + வாகனங்களில் நேரத்தை விரயமாக்கவே அன்றி ஏழைகளுக்காக அல்ல!! விலை ஏற்றங்கள் இப்படியே தொடர்ந்தால் இவர்களது வாழ்க்கைதரம் எப்படி உயரும்? நாடு எப்படி வளர்ச்சி அடையும்? இதை தமிழர்களுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த அவலம் நாடு முழுவதும் உள்ளவைதான்; சகோதர இனத்தவர்களும் சந்திக்கும் பிரச்சனைதான். அன்றெல்லாம் பாண், பருப்பு விலைகளில் பத்து பைசா ஏறினாலே ஆட்சியை மாற்றும் சகோதர இனத்தவர்கள் இன்று இத்தனை பாரிய விலை ஏற்றங்களையும் சகிப்பது/மௌனிப்பது எதனால்!!!!

அரசியல், இனம், மதம் கடந்து சிந்திக்கவேண்டி பிரச்சனைகள் இவை, இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒருமாத சம்பளம் ஒருநாள் தீவனத்திற்கே போதாத நிலையை உண்டாக்கிவிடும்!!!!

*-------*

Friday, April 27, 2012

கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!



ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்; சில காலங்களின் பின்னர் அது வேண்டாமென்று தோன்றியதால்  நீண்ட  நாட்களாக கலைஞர் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவரை திட்டிக்கொண்டே இருப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது என்கின்ற எண்ணம்தான் அதற்கு காரணமன்றி  கலைஞர் மீதான எனது எண்ணங்களின் மாற்றமல்ல!!  பொதுவாக  இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர்மீது வெறுப்பும், கோபமும் ஏற்ப்பட காரணம்; அவர் இறுதிநேர யுத்தத்தை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வழிசெய்யவில்லை என்பதுதான்!! ஆனால் எனக்கு கலைஞர் மீதான வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் அது காரணம் அன்று!!

ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை  காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கலைஞர் மத்தியில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி;  தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை  என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய  உண்மை! அந்த விடயம் கலைஞருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!!  கலைஞர்  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கலைஞரை தமிழினத்  துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும்,  அதுவொரு  பக்கா அரசியல் என்பதும்  சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!

அந்தவகையில் எனக்கு கலைஞர் காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த;  தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு  நடத்திய உண்ணாவிரத போராட்ட  நாடகம்தான் இத்தனைநாள்  மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக  சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! 'யுத்த நிறுத்தம்'  நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகளில் (தமிழக மற்றும் இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில்) அறிவித்த கணம்  கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுமே மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று சொல்லலாம்!!!


பசுமரத்து ஆணிபோல அந்த நாட்கள் இன்னமும் என்நினைவில்; கொழும்பில் ஒரு Food City யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் தொலைபேசி செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது; "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்" என்பதுதான் அந்த செய்தி. அடுத்த கணமே கொழும்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் அத்தனை இடங்களுக்கும் இந்த செய்தி மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. நான் மதியம்  சாப்பிட வீட்டிற்கு  வருவதற்குள் உண்ணாவிரதம் 'யுத்த நிறுத்தம்' என்னும் சாதகமான  தீர்வுடன் நிறைவடைந்திருந்தது; எல்லோருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி; காரணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என மிகவும் வேண்டியவர்கள் யுத்த பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்த நேரமது!!! அதனால் அனைவருக்கும் தம் உறவுகள் மீண்டு தம் கைகளில் இணைந்ததாக ஒரு பூரிப்பு!

மறுநாளே கலைஞர் செய்தது உண்ணாவிரதம் அல்ல, அதுவொரு பக்கா அரசியல் நாடகம் என அறிந்தபோது ஒடுமொத்த நம்பிக்கைகளும் தூக்குவாரிப் போட்டன!!!  கலைஞர் எம்மை செருப்பால் அடித்ததைபோல உணர்ந்தோம்.  கலைஞர் என்னும் எழுத்தாளர், அரசியத்தலைவர் மீதிருந்த மரியாதை, ஈடுபாடு எல்லாம் அந்த நொடியிலேயே காற்றில் பறந்தது. அதன் பின்னர்கூட  மனதில் ஏதோ ஒரு மூலையில் கடைசி நேரங்களிலாவது கலைஞர் ஏதாவது செய்யமாட்டாரா என்கின்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது!.  40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!

அந்த தேர்தல் முடிவுகளின் பின்னர்  பிள்ளைகளின் அமைச்சர் பதவிகளுக்காக  டெல்லிவரை  பேச்சுவார்த்தைக்கு சென்ற கலைஞர் அன்று ஈழத்து மக்களுக்காக கடதாசியும், மின்னஞ்சலும் அனுப்பியதோடு நிறுத்தியிருந்தால்க்கூட எமக்கிந்த கோபமும் ஆத்திரமும் இருந்திருக்காது!! அவரது அந்த ஒருசிலமணிநேர உண்ணாவிரத நாடகம்தான் இலங்கை தமிழ் மக்களுக்கு  இரத்தம் உறையும் அளவிற்கு கோபத்தையும்,. ஆத்திரத்தையும் தூண்டியது!!!  இந்த ஏமாற்றமும், கோபமும், ஆத்திரமும் இறுதி மூச்சிருக்கும்வரை பல இலங்கை தமிழருக்கு தீராத வடுக்கள்!! எதிரியைகூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை????


இவை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் கலைஞருக்கு என்ன ஆச்சு? தேர்தல் காலம் கூட இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்போதெல்லாம்  ஈழம், ஈழம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் என்றுதான் புரியவில்லை!!  சனல் 4 இன்  'கொலைக்களம்' பார்த்து கண்ணீர் வடித்ததாக இவர் சொல்லியபோது; இவர் மீதிருந்த கோபமும், ஆத்திரமும் பன்மடங்கு  ரீசாஜ் செய்யப்பட்டது!!! இப்போதெல்லாம் இலங்கை தமிழர்கள்மீது பரிவு உண்டாகி தனி ஈழம் என்றெல்லாம் பேசுகின்றார்; இதை கேட்கும்போது ஆத்திரம் தவிர்த்து வேறெந்த உணர்வும் ஏற்படவில்லை!! இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை  கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!


அன்று ஈழத்து பெண்களை சிங்களம் கற்பழித்தது!!
இன்று ஈழத்து எச்சங்களை தமிழக அரசியல் கற்பழிக்கின்றது!! 

 

தமிழகமே !!!

உங்கள்  அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது  குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது  ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி வாக்கு பிச்சை கேட்க்கப்போகின்றீர்கள்!!  போதும்,  தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்!!! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடித்த பல்ட்டிகள் போல் சர்க்கஸ் குரங்கு கூட இத்தனை தடவை குட்டிக்கரணம் போட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!!  அத்தனை பல்ட்டிகளும் உங்களுக்கு  ஒட்டு, எங்களுக்கோ வேட்டு!!!  உண்மையில் யாராவது தமிழக தலைமைக்கு எம்மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள்!! நீங்கள் காட்டும் குறளி வித்தைகள் எம்மை இன்னமும் காயப்படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!

* தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை  இலங்கைத் தமிழர்கள்  இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

*.......*

Thursday, April 26, 2012

இரவுநேரங்களில் வீடுகளில் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கும் முக்கியமான நிகழ்ச்சிகள்.....



ஐ.பி.எல் - ஆசியாவின் மிகப்பெரும்  செல்வந்த குழாமான BCCI ஆல் நடாத்தப்படும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி, வருடத்தில் கிட்டத்தட்ட; 45 நாட்களுக்கு இரவு 8 மணி ஆனதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் போதை வஸ்திற்கு  அடிமை ஆகியவர்களைபோல டிவிக்கு முன்னால் உட்கார வைக்கும் அளவிற்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வருடாந்த திருவிழா!! சமூக ஆர்வலர்களாலும், கிரிக்கட் விரும்பிகளாலும் விமர்சிக்கப்பட்டாலும்; கிரிக்கட்டை; ஆழமாக ரசிப்பவர்கள் தொடக்கம், கிரிக்கட்டை மேலோட்டமாய் பார்ப்பவர்கள்வரை அனைவரையும் ஐ.பி.எல் ஈர்த்துள்ளது என்பதை மறுக்கமுடியாது!!! ஐ.பி.எல் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதெல்லாம் விவாதத்திற்கு வேண்டுமானால் கருப்பொருளாக இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அது வெறும் வெட்டிப் பேச்சுத்தான்!!! ஐ.பி.எல் பார்ப்பவர்களுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அதனை ஐ.பி.எல் 100% திருப்தியாக கொடுக்கின்றது!!

சர்வதேசப் போட்டிகளில் வெவ்வேறு நாடுகள் சார்பாக  முட்டிக்கொண்ட வீரர்கள் நண்பர்களாக ஒருமித்தும்;  ஒன்றாக தாய் நாட்டிற்காக  ஆடிய  வீரர்கள் எதிரெதிர் அணிகளில் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வதும் சுவாரசியம்!!!  40 வயதிலும் கலக்கும் முதிய நட்சத்திரங்கள், முகம் தெரியாமல் அறிமுகமாகி ரசிகர்களை  கவரும் இளைய நட்சத்திரங்கள், சிக்சர் வானவேடிக்கை, பவுண்டரி மழை, துள்ளி எறியும் விக்கட்டுகள், பிரமாதமான கேட்ச்கள்(Catch), உற்சாக  நடன அழகிகள், வான வேடிக்கைகள் என அமர்க்களப்படுத்தும் ஐ.பி.எல் ஒரு பக்கா கமர்சியல் விருந்து என்பதில் சந்தேகமில்லை....

கிறிஸ் கெயிலை கையில் பேட்டுடன்  பார்க்கும் பொது; அந்த எமதர்மராஜனே நேரில் வந்ததுபோல பிரம்மாண்டமாய் இருக்கும்!!  கங்குலியை கேப்டனாக பார்க்கையில் பழைய ஞாபகங்கள் நினைவாக வந்து  ஒருவிதமான மரியாதை கலந்த ஹீரோயிசம் தெரியும்!!! நாம் ரசித்த, இனிமேல்  ரசிக்க முடியாதென்று நினைத்த முரளிதரன், டிராவிட், கங்குலி,  கில்க்ரிஸ்ட் என பல ஜாம்பவான்களை மீண்டும் மைதானத்தில் விளையாடுவதை  பார்ப்பதில்  இனிய, சுகமான அனுபவம் கிடைக்கின்றது!! பணத்தையும்  தாண்டி  ஸ்போட்மன்ஷிப், நட்பு, மரியாதை, விட்டுக்கொடுப்பு, போட்டி, திறமைகள்  என பல நல்ல விடயங்களும் ஐ.பி.எல் லில் உள்ளதை மறுக்க முடியாது!!!



நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை வாராவாரம்  நடிகர் சூர்யாவினால் நடாத்தப்படும் கேம்ஷோ; உலகம் முழுவதும் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம். SMS மூலம் மக்களின் பணம் அதிகளவில் சுரண்டப்படுகின்றது, மிகவும் இலகுவான கேள்விகள் கேட்கப்படுகின்றது என  பலராலும் பலவிதமாக  விமர்சனம் செய்யப்பட்ட நிகழ்ச்சி!!!   விமர்சனங்கள் என்னதான் எதிர்மறையாகவும், கிண்டலாகவும் சொல்லப்பட்டாலும் 'நீங்களும் வெல்லாலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி 'மெகா'ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!!  அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் இந்த நிகழ்ச்சியை குடும்பம் குடும்பமாக பார்க்கின்றனர்!!!

எஸ்.எம்.எஸ்சில் பணத்தை அள்ளுகிறார்களா? அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுகிற நிலையில் அதை அனுப்புபவனும் இல்லை, நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பவனும் இல்லை!!  காரணம்; அனுப்புபவன் தனக்கு பங்குபற்ற சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்கிற விருப்பத்தில், எதிர்பார்ப்பில் அனுப்புகிறான். அதை பார்ப்பவனுக்கு அதுபற்றிய எந்த கவலையும் இல்லை, அவனுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அது கிடைக்குமிடத்து  அவன் இதெல்லாம் சிந்திக்கப் போவதில்லை!!! சமூக ஆர்வலர்கள் பொங்குவதும், அப்புறம் ஆப் ஆவதும் சகஜம்தானே :-)

விமர்சனங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியை நோக்கினால் இதுவொரு சிறந்த பொழுதுபோக்கு + பொது அறிவு நிகழ்ச்சி என்பதில் சந்தேகம்  இல்லை. மிக இலகுவான கேள்விகள் கேட்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு; போட்டிக்கு தேர்வாகும் எவரும் எந்தக் கேள்விக்குமே  சரியான பதில் சொல்லாமல் திரும்ப செல்லக்கூடாது என்பதற்காகவே அவ்வாறான கேள்விகள் முதல் இரண்டு கேள்விகளுக்குள் கேட்கப்படுகின்றது!!! (அவற்றுக்கு  கூட பதில் தெரியாமல் போன 'படித்த' ஞான சூனியங்களும் உண்டு) 10,0000 உறுதிப்பணம் கடந்த பின்னர் கேள்விகள் வலுக்கத் தொடங்குகின்றன; பலருக்கும்  இலகுவாக தோன்றும் கேள்விகளுக்கு சிலருக்கு பதில் தெரியாமல் இருக்கும்!! பலருக்கும் பதில் தெரியாத கேள்விகள் சிலருக்கு இலகுவாக இருக்கும்!

தமிழ், சமயம், புராணம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாயும், சில மறந்த விடயங்களை ஞாபகப் படுத்த வசதியாகவும் இந்த நிகழ்ச்சி உதவுகின்றது!!  பொதுஅறிவு என்றாலே  ஓடிப்போகும் குழந்தைகளுக்கும் இப்போது பொதுஅறிவில் ஆர்வம் தூண்டப்பட்டிருக்கின்றது!! வெளி உலகமே மறந்து குடும்பத்திகற்காக தேயும் அம்மாக்களுக்கும், தமது கெட்டித்தனத்தை காட்ட துடிக்கும் அப்பாக்களுக்கும், வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும், தமது பொது அறிவை சுயபரிசோதனை  செய்யும் இளசுகளுக்கும், புதியதை அறிந்துகொள்ளும் சிறுசுகளுக்கும் 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி' ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி!!

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சூர்யாவிற்கு ரசிகர்கள் மிகப்பெருமளவில் அதிகரிக்கவும் சாத்தியம் உண்டு!!!  அதிகமான குடும்பங்களில் சூர்யாவை  குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு சூர்யாவின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது!!  அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும் ஆடியன்ஸும் அந்த வார முடிவுகளில்  சூர்யாவுடன்  கை கொடுத்து  பேசுவது சூர்யாவின் மீதான ஈர்ப்பை நேரடியாகவும், தொலைக்காட்சி ஊடாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது!!! மற்றும் மனிதர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம், பந்தா துளியளவும் இல்லை!!  ஒரு நடிகனாக என்னை இம்ப்ரெஸ் செய்யாத சூர்யா ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக  இம்ப்ரஸ் செய்துள்ளார்!!



சூப்பர் சிங்கர்  - 
விஜய் தொலைக்காட்சியில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அதிகமான வீடுகளில் பார்க்கப்படும் நிகழ்ச்சி!! பாடலைவிட சிறுசுகள் அடிக்கும் கொட்டமும், கலகலப்புதான் ஹைலைட்!!  துறுதுறுப்பான குழந்தைகள், கலகலப்பான நடுவர்கள், சலசலப்பான தொகுப்பாளர்கள் என வாராவாரம் இசை + பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இந்தத் தடவை யார் வெல்வார்கள் என்று ஆரூடம் சொல்லுமளவிற்கு Extra Ordinary யாக எந்த சிறார்களும் தென்படவில்லை என்றாலும் அதிகமான சிறுவர்கள் மிகவும் திறமையானவர்களாக உள்ளமை ஆச்சரியப்பட வைக்கின்றது!!  பாடல் மட்டுமல்ல, நடனம், டைமிங்கான பேச்சு என சிறார்கள் அசத்துகிறார்கள்!!

இசை என்பது பொதுவாக எல்லோருகும்மே பிடித்த ஒரு விடயம், அதனை மழலைகள், சிறுவர்கள் பாடும்போது மனதிற்கு சந்தோசமும், திருப்தியும் ஏற்ப்படுகின்றமை இயல்பான விடயம். அதேநேரம் பாட்டுப் பிடிக்கும் எல்லோருக்கும் பாடலின் ராகம், தளம் தெரிந்திருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை, சிலரது பாடல்கள் எமக்கு பிடித்திருக்குமானாலும் நடுவர்கள் குறை சொல்வார்கள்; சிலரது பாடல்கள் எம்மை பெரிதாக ஈர்க்காமலிருக்கும், ஆனால் அவற்றை  நடுவர்கள் ஓகோன்னு  சொல்லுவார்கள்!! எமக்கு பிடித்த, நாம் சிறப்பாக பாடுபவர் என நினைத்த போட்டியாளர் போடியிலிருந்து வெளியேற்றப்படும்போது ஏமாற்றமும், கவலையும் உண்டாகும்!!  இப்படியாக சில ஏமாற்றங்களும்  பல சுவாரசியங்களும் கலந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.


மெகா சீரியல்கள் -
வார நாட்களில் குடும்ப பெண்களை குறிவைத்து எடுக்கப்படும் ஏதோ ஒன்றுதான் மெகா சீரியல்கள்!!! ஐ.பி.எல், 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி'  நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்கள்தான் பல வீடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன; விளம்பர இடைவேளைகள்தான் ஏனைய நிகழ்ச்சிகளை பார்வையிட அதிகமான வீடுகளில் வழங்கப்படும் காலக்கெடு!!! அப்படி என்னதான் இருக்கின்றது மெகா சீரியல்களில் என்று நோக்கினால்... நோக்கினால்... நோக்கினால்...... நோக்கிக்கிட்டே இருக்கின்றன் அதில் எந்த விடயம் இந்தளவிற்கு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றது  என்பது புரியவே இல்லை!! அது பெண்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியமாககூட இருக்கலாம்!!!

அரைத்தமா, அப்பப்போ தேவைக்கேற்ப  நல்லவராகவும் கெட்டவராகவும் மாற்றப்படும் கேரக்டர்கள், லாஜிக் என்றால் கிலோவிலா? லீட்டரிலா? என கேட்கும் இயக்கம், எக்கச்சக்க வில்லத்தனம், தியாகத்தின் சொப்பனமான நாயகி என வருடக்கணக்காக ஒரே குட்டையில் மிதக்கும் மட்டைகளாக மெகாசீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பல பெண்களுக்கு அதுதான் ஆறுதல் என்பதையும் மறுப்பதற்கில்லை!!! ரசனைகள் மாறுபட்டவை.... ஆனாலும் இப்போதெல்லாம் பல டாக்டர்கள்  இரத்த அழுத்தம் உள்ள வயது அதிகமான பெண்களுக்கு மெகா சீரியல்கள் பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறும் அளவிற்கு மெகாசீரியல்களில் நெகடிவ்வான சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை ஆரோக்கியமானதாக படவில்லை!!!



மானாட மயிலாட -
ஞாயிற்றுக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை  இன்றைக்கும் அதிகமானவர்கள் விரும்பிப் பார்கின்றார்கள்!!! ஆனால் இப்போதெல்லாம் நடனத்தைவிட 'ஆபாசம்' சற்று தூக்கலாக தெரிவது போலுள்ளது! கலா மாஸ்டர், நமீதா, குஸ்புவை கிண்டலடித்தாலும் பலரும் இதையும் தொடர்ந்தும்  பார்க்கத்தான் செய்கின்றனர். எத்தனை நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகினாலும்  மானாட மயிலாட சம்திங் ஸ்பெஷல்!!! 

அது இது எது - விஜய் தொலைக்காட்சியில் அதிகமாவனர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி; பக்கா பொழுதுபோக்கு + நகைச்சுவை நிகழ்ச்சி. சிவகார்த்திகேயனின் டைமிங் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகுதான் ஹைலைட்!!  சிரிக்கவைக்க வருபவர்கள் சில நேரங்களில் கழுத்தறுத்தாலும் பல நேரங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றனர்.


கையில் ஒருகோடி -
சண் தொலைக்காட்சியின் மற்றொரு பல்ப்பு  வாங்கிக்கொண்ட  நிகழ்ச்சி!!! 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'க்கு போட்டியாக ஒளிபரப்பினாலும் இரண்டுக்கும் மக்கள் கொடுத்துள்ள வரவேற்ப்பு மலைக்கும் மடுவுக்கும் நிகரானது!!! புலியை பார்த்து பூனை சூடுபோட்ட நிலைதான் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை சன்னுக்கு!!!

ஜெயா டிவி  - சாரிங்க, எப்ப இந்த சானலை மாத்தினாலும் நியூஸ்தான்  வருது :-)

K TV திரைப்படங்கள் -
முழுமையாக திரைப்படத்தை பார்ப்பது சாத்தியமில்லாவிட்டாலும் இரவு சூப்பர்ஹிட்  காட்சிகளில் அப்பப்போ போடப்படும் சில சுவாரசியமான திரைப்படங்களின் சூப்பர் சீன்கள் விளம்பர இடைவேளைகளில் பார்க்க கிடைக்கின்றது!!

* இவை எவற்றையும் பார்க்காமல்  இசை சானல்கள், காமடி சானல்கள், டிஸ்கவரி, அனிமல் பிளன்ட், BBC , இதர ஆங்கில சானல்கள்,  IPL தவிர்ந்த வேறு SPORTS சானல்கள், செய்தி சானல்கள் என பொழுதை கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், அனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிக குறைவு!!!
*--------*